Thursday, September 17, 2015

காலை உடைத்த காஞ்சனா – இறுதி பாகம்


முதல் பதினாறு பாகங்களைப் படித்து விட்டு பின் இங்கே தொடரவும்.












நெல்லை சென்று ஆறாவது கட்டு போடும் போது வலி குறைந்து விட்ட விபரம் குறித்து கேட்ட போது ‘வலி குறைவதுதான் எலும்பு சேர்வதற்கான அறிகுறி’ என்று கூறிய வைத்தியரிடம் மெதுவாக துபாய் போக இருக்கும் விபரம் கூறி அவரது அறிவுரையும், ஆலோசனையும் கேட்டேன். ‘இன்னும் நான்கைந்து கட்டுகள் போட்டால் பூரணமாக குணமாகி விடும். அவசரமாக போக வேண்டுமென்றால் செல்லுங்கள். இப்போது அதிகமாக நடக்காமல் ஓய்வில் இருப்பதால் வீக்கம் இல்லாமல் இருக்கிறது. அதிக நேரம் நின்றாலோ, நடந்தோலோ, காலைத் தொங்கவிட்டு அமர்ந்தாலோ நிச்சயம் வீக்கமும், அதன்பின் வலியும், வேதனையும் தொடர்கதையாகி விடும். உங்கள் விருப்பம்’ என்று கூறி விட்டார்.

வீட்டிற்கு வந்தும் என்ன செய்யலாம், எப்போது கிளம்பலாம் என்று ஒரே யோசனை. வெளிநாட்டு வேலையும் முக்கியம். அதே நேரம் காலும் முக்கியம். குழம்பி, குழம்பி தெளிவான முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை. மறுநாள் பகலில் அழைத்த மேலாளர் அந்த வார இறுதிக்குள் சென்னை வந்தால்தான் அடுத்த வாரம் கிளம்ப முடியும். இல்லையென்றால் வேறு ஆள் தயாராக இருக்கிறார். அவரை அனுப்பி விடுவோம் எனக் கூறவே சரி ஆனது ஆகட்டும் என முடிவெடுத்து மறுநாள் வியாழனன்று சென்னை கிளம்பி விட்டேன்.

வெள்ளியன்று அலுவலகம் சென்றதும் உடனே மெடிக்கல் டெஸ்ட் எடுக்க செல்ல வேண்டிய துபாய் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையின் முகவரி தந்தனர். மதியம் இரண்டு மணி அளவில் அசோக் நகரில் இருந்த அந்த மருத்துவமனைக்குச் சென்று இரத்தம், எக்ஸ்ரே, முழு உடல் தகுதி உள்பட எல்லா விதமான டெஸ்ட்டுகளும் எடுக்கும் போது பண்டாரவிளை வைத்தியரிடம் இரண்டு நாள் முன் போட்டிருந்த கால் கட்டை அவிழ்த்து விட்டேன். ’ரிப்போர்ட்டுகளை டாக்டருக்கு அனுப்பி விடுவோம். நீங்கள் இரவு ஏழு மணிக்கு வந்து டாக்டரைப் பார்த்து விட்டு ரிசல்ட்டுகளை கேட்டு தெரிந்து கொண்டு ரிப்போர்ட்டுகளை வாங்கிச் செல்லுங்கள்’ என்று கூறிடவே சென்னையில் பார்க்க வேண்டிய சில நண்பர்களை அவரவ்ர் அலுவலகத்தில் சென்று பார்த்து விட்டு ஆறே முக்கால் மணி அளவில் மருத்துவமனை சென்றேன்.

ஏறக்குறைய இரண்டு வாரங்களாக இறுக்கமாகப் போட்டிருந்த கட்டை அவிழ்த்து விட்டு ‘கிரிப் பேண்டும்’ போடாமல், அங்கே, இங்கே என அலைந்ததால் கால் வீங்கி விட்டது. நடக்கும் போது வலியும் இருந்தது. என் முறை வந்ததும் லேசாக தாங்கி, தாங்கி நடந்து டாக்டர் அறைக்குள் நுழைந்தவனை அமரச் சொன்ன அந்த இளவயது பெண் டாக்டர், ‘உங்க ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன். வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா எக்ஸ்ரேயில் உங்க கால்ல ‘ஏர் கிராக்’ தெரியுது’ என்றவரிடம் இரண்டு வாரம் கட்டு போட்டிருந்த விபரத்தையும், அன்று மதியம்தான் அவிழ்த்தேன் என்றும் கூறினேன்.

வலது காலை உயரத்தில் வைக்கச் சொல்லி பெருவிரல் மற்றும் பாதத்தின் மேற்பாகத்தில் வீங்கியிருந்த பகுதியை கையால் அழுத்தி சோதனை செய்தபோது வலியால் நான் முகம் சுழிப்பதை கவனித்தவர், ‘கால் எலும்பு இன்னும் சரியா சேரலை. அதான் வலியும், வீக்கமும் இருக்கு. உங்க நடையிலேயும் வித்தியாசம் தெரியுது. பாருங்க, ‘நீங்க போறது கட்டுமானத்துறை. நிறைய நேரம் நிற்க வேண்டியிருக்கும். மேலே, கீழே இறங்க வேண்டியிருக்கும். கால் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் சரிவராது  என்பதால் நான் உங்களுக்கு தகுதிச் சான்றிதழ் தர இயலாது.’ என்று கண்டிப்பாக கூறவும் மேலாளரை உடனே அலைபேசியில் அழைத்து விபரம் கூறினேன்.

டாக்டரிடம் போனை கொடுக்கச் சொல்லி பேசியவர் நான் செல்வது அலுவலகத்தில் அமர்ந்திருந்து செய்யக்கூடிய வேலைக்குத் தான் என்றும், பணியிடத்திற்கு (சைட்) சென்று நிற்கவோ, ஏறி, இறங்கவோ வேண்டாம் என்று உறுதி கூறினார். அப்படியானால் அலுவலகப் பணிக்கு மட்டும் என சான்றிதழ் தருவதாக மருத்துவர் கூறிவிட்டார். கால் மேற்கொண்டு வீங்காமல் இருக்க எப்போதும் கிரிப் பேண்டால் அழுத்தமாக கட்டு போட்டு கொண்டு இருப்பதே நல்லது என்று அறிவுறுத்தி விலை உயர்ந்த, தரமான நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட ஒரு பேண்டையும் அதே மருத்துவமனையில் வாங்கி கொள்ளச் சொல்லிவிட்டார்.

அடுத்த இரண்டு நாட்கள் அலுவலகம் சென்று விட்டு 24.02.2005 வியாழனன்று இரவு சென்னை ஏர்போர்ட்டிலிருந்து கிளம்பி துபாய் அடைந்தேன். எலும்பு விரிசல் சேர்வதற்காகவும், வலி, வீக்கம் இல்லாமல் இருப்பதற்காகவும் அடுத்த ஓராண்டு வரை குளிக்கும் நேரம் தவிர தூங்கும் நேரம் உள்பட மற்ற நேரம் முழுதும் காலில் எப்போதும் இறுக்கமாக கிரிப் பேண்ட் சுற்றியிருந்தேன். அது வெளியே தெரியாமல் இருக்க கட்டின் மேலே சாக்ஸ் அணிந்து அதன் பின் ஷூ அல்லது செருப்பு அணிந்து மிகவும் கஷ்டப்பட்டேன்.

சென்னையில் மெடிக்கல் டெஸ்ட்டின் போது என்னைப் பரிசோதித்து தகுதிச்சான்றிதழ் தர முடியாது என்று கூறிய இளவயது பெண் டாக்டரின் பெயரும் காஞ்சனா.

( முற்றும் )

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே…. காலை உடைத்த காஞ்சனா கதையின் நிகழ்ச்சிகள் அனைத்தும் என் வாழ்வில் நடந்த அமானுஷ்ய சம்பவத்தின் தொகுப்பாகும். நம்ப முடியாத ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் சென்ற ஸ்கூட்டரில் எனக்கு முன்னும், பின்னும் அமர்ந்திருந்த இருவருக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை. வண்டியும் கீழே விழவில்லை. ஆனால் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த எனக்கு மட்டும் கால் முறிவு என்பதாலே நடந்த சம்பவங்களை விரிவாக பகிர்ந்து கொண்டேன். வண்டி கதவின் இடைவெளி வழியாக பயணித்த அந்த நொடிப்பொழுது நேரத்தில் திடீரென வேகமாக காற்று அடித்தது, கதவு மூடி காலில் மோதியது எல்லாம் கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டது.

மேலும் இந்த சம்பவம் நடந்தது
2005ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரம். அதன்பின் எழுத வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியவில்லை. ஒரு வழியாக 2012ல் எழுத ஆரம்பித்ததும் மூன்று வருடமாகியும் தொடர்ந்து எழுத முடியாமல் இப்போதுதான் முடிக்க முடிந்தது.


நன்றி. வணக்கம்.

No comments: