Saturday, August 22, 2015

மாண்புமிகு பிரதமர் திரு.மோடியின் திட்டங்கள் பலன் தருமா....


எனது முந்தைய பதிவான பிரதமர் திரு.மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் - அனைவரும் அறிய வேண்டிய உண்மைகள்  என்ற கருத்துக் கட்டுரைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஏகப்பட்ட கருத்துக்கள் பதிவாயின. உரிய பதில் கருத்துக்களை ஏற்கனவே அங்கு எழுதி விட்டாலும் மேலும் சில தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.  பல நாடுகளில்,  பல துறைகளில்  பணிபுரிந்த அனுபவத்தின் துணை கொண்டு கூடுமான வரை தகுந்த விளக்கங்களும் தர முயன்றிருக்கிறேன்


கிணற்றுத் தவளையாய் நாம் இருந்தால் நமக்கு தலைக்கு மேலே உள்ள ஒரு வானமும், காலுக்கு அடியில் உள்ள ஒரு பூமியும் மட்டும்தான் தெரியும். வெளிஉலகம் பற்றி எதுவும் தெரியாமல் ஒரு சிறிய இடத்திலே உழன்று கொண்டு இருப்போம்.  ஆறு, ஏரி, குளம், ஊற்று, ஓடை, வாய்க்கால், வடிகால், கடல் பற்றிய எந்த அறிவும், அனுபவமும் ஏற்படாது. நாம் இருக்கும் குட்டையிலே குழம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். காலத்தால் கட்டுண்டிருந்தோம். அவிழ்க்க ஆள் வரும்போது ஆதரவு கொடுத்தால்தான் நம் முன்னேற்றத்திற்கு முயற்சி எடுப்பவர் முன்னேறி வருவர். விடுபடும் நாமும் குறுகிய கிணறு தாண்டி பரந்து, விரிந்த உலகில் பறக்க சிறகை விரிக்க முடியும்.


நம்நாடு விடுதலை அடைந்த பல ஆண்டுகளுக்குப் பின் சுதந்திரம் அடைந்து நம் கண்முன்னே வியத்தகு வளர்ச்சி அடைந்த எந்த ஒரு இயற்கை வளமும், வரலாறும், அனுபவமும் இல்லாத சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள் முன்னேறியது எப்படி என்ற தகவல்கள் இணையம் முழுதும் இறைந்து கிடக்கின்றன.  வீண்வாக்குவாதம் செய்பவர்கள் அந்த நாடுகள் வளர்ச்சி அடைந்த விதத்தையும், ஆதாரபூர்வ விஷயங்களையும் படித்துப் பார்த்து பின் விவாதங்களை தொடர வேண்டுகிறேன். எல்லா இடத்திலும் மற்றும் அனைத்து மனிதருக்குள்ளும் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கின்றன. தீயவற்றில் இருந்து பாடம் படித்து கொண்டு நமக்கு தேவையான நல்லவற்றை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.



 எதற்கும் உதவாத உப்பு நீர் சூழ்ந்த சதுப்பு நிலத்தைக் கொண்ட இன, மத வேறுபாடு நிறைந்த சிறிய தீவான சிங்கப்பூரினால் எந்த உபயோகமும் இல்லை என 1965ஆம் ஆண்டு மலேசியா கூட்டாட்சியில் இருந்து கழட்டி விட்டது. திடீரென உலகின் சின்னஞ்சிறிய தனிநாடாக அறிவிக்கப்பட்டு ஆதரவின்றி தவித்து நின்ற மக்களுக்கு அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது உலக அரசியல்வாதிகளில் ஒப்பற்றவரான மறைந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீ குவான் யூ 'என்ன செய்யப் போகிறோம், எப்படி முன்னேறப் போகிறோம் என்று தெரியவில்லையே. நம் எதிர்காலம் இருட்டாகிப் போய் விடுமோ' என்று தொலைக்காட்சிப் பேட்டியில் அழுது அரற்றினார். ஆனால் சில நொடிகள் தான். தலைவன் கலங்கினால் தம் நாட்டு மக்களும் மனம் குழம்புவர் என்பதை உணர்ந்து, உடன் மனம் தெளிந்து, வழியும் கண்ணீரைத் துடைத்து 'ஒத்துழைப்பு கொடுங்கள். நாட்டையும், நம் வாழ்வையும் உயர்த்திக் காட்டுகிறேன்' என்று சவால் விட்டு சாதித்தும் காட்டினார். உலக நாடுகள் எங்கும் சுற்றுப் பயணம் செய்து, முதலீடுகளை ஈர்த்து பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்பேட்டையாக சிங்கப்பூரை மாற்றி, வேலை வாய்ப்பை பெருக்கி தொழிலிலும், பொருளாதாரத்திலும் மேம்படுத்தினார்.



திரு.லீ குவான் யூ மக்களிடையே ஆற்றிய ஏராளமான, எழுச்சி உரைகளை இணையம் மூலம் பாருங்கள். அவரது முழக்கங்களில் குறிப்பிட்டு கூறவேண்டியது, 'வளர்ச்சி அடையும் போது சிங்கப்பூர் மலாய் மக்களானதாகவோ, இந்தியருக்கானதாகவோ, சீனருடையதாகவோ இருக்காது. எல்லா இன மக்களும் சிங்கப்பூரியர்கள் என்றே கருதப்படுவர். எல்லா இனமும், மதமும், மொழியும் தனித்தன்மை கொண்டு போற்றி பாதுகாக்கப்படும். ஒன்றுபடுவோம். உழைப்போம். உயர்வோம். என்று உறுதி கொள்வோம். உலக அரங்கில் உன்னத நிலை அடைவோம்'. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே என்ன ஒரு தீர்க்கதரிசனம். திட்டமிடல்.



கறுப்பு, வெள்ளை காலத்தில் குடிசைக் குடியிருப்புகளில் வசித்து வந்த சிங்கப்பூர் மக்கள் அனைவரும் தற்போது அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் அனைத்து வசதிகளோடும் உலகின் முன்னணி மாதிரி நகரின் குடிமக்கள் என்ற பெருமையோடு வாழ்கின்றனர். எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மக்களை தயார்படுத்தியதில் திரு.லீ குவான் யூ மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் பங்கு அளப்பதற்ரியது. உலகத்திலேயே வாழத்தகுந்த முன்னணி நகரமாகவும், சிறந்த சுற்றுலா தளமாகவும், பொழுதுபோக்கு நகரமாகவும் சிங்கப்பூர் மாறியதில் மக்களின் பங்கும் மகத்தரியது. நல்ல தலைமையை அடையாளம் கண்டு,  அணி வகுத்து ஆதரவு கொடுத்தார்கள். ஐம்பது ஆண்டுகளில் மக்கள் சக்தியால் சிங்கப்பூர் சாதித்த சாதனைகள் ஏராளம்.ஏராளம்.



துபாய் மற்றும் பிற வளைகுடா நாடுகளின் வரலாற்றைப் பார்த்தால் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படும் வரை சாதாரண நாடுகள்தான். எண்ணெய் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் கூட அவர்களுக்கு தெரியாது. எண்ணெய் இருப்பதை கண்டறிந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே அதற்கான ஆலைகள் அமைக்கவும், சுத்திகரித்து ஏற்றுமதி செய்யவும் அந்தந்த அரபு நாட்டு அரசர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. அவர்களது நாட்டு பாதுகாப்பிற்கு இராணுவ உதவியும், கல்வி, பொருளாதார, மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்பங்களையும் வசதிகளையும், வாய்ப்புகளையும் வாரி வழங்கின. அவ்வாறு ஆதரவு தந்த நாடுகளின் கைபற்றி கனவு வளர்ச்சி கண்டன. கல்வி, செல்வத்தில் சிறந்தன.



என்னடா, 'இந்தியப் பிரதமரின் திட்டங்கள் பலன் தருமா' என்று தலைப்பு இட்டு விட்டு மற்ற நாடுகள் வளர்ச்சி அடைந்த வரலாற்றினை கூறிக் கொண்டிருக்கிறானே என்று எவரும் குழப்பம் கொள்ள வேண்டாம். நமது நாட்டிலும் இது போன்று ஏதாவது அதிசயமும், அற்புதமும் நடந்திடாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாட்டையே ஏற்புடைய எடுத்துக்காட்டுகளோடு  பொதுவில் பகிர்ந்தேன். எப்படியும்  மொத்த ஐந்தாண்டுகளின் மீதமிருக்கும் காலத்தையும் இந்தியாவை ஆளப் போவது பெரும்பான்மையான மாநில மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற இந்த அரசாங்கம்தான். ஆக்கப் பொறுத்த நாம் ஆறவும் பொறுப்போம்.



கடைசியாக ஜனரஞ்சகமாக ஒரு கருத்து கூறி கட்டுரையை முடித்துக் கொள்கிறேன். முகவரி படத்தில் வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு 'முதலில் வாங்கோணும். பின்னே தோண்டோணும். அப்புறம் கட்டோணும்.' என்று ஒரு அருமையான வசனம் உண்டு. ஆட்சியை மக்கள் நம் ஆதரவோடு வாங்கிவிட்டார்கள். இப்போது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தேவையான ஆழமான, அகலமான அஸ்திவாரம் என்னும் அன்னிய முதலீடுகளை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி என்னும் வலுவான கட்டுமானத்தை ஐந்தாண்டுகளுக்குள் எழுப்பத் தவறினால் அடுத்த தேர்தலில் அழுத்தமான கேள்விகளோடு தக்க பதில் கொடுப்போம். அதுவரை என்ன செய்கிறார்கள்.எதற்கு செய்கிறார்கள். எப்படி செய்கிறார்கள் என்று உற்றுப் பார்ப்போம். உண்மையான ஜனநாயக வலிமையை ஒன்றுபட்டு உணர்த்துவோம்.


நன்றி. 

வணக்கம்.

No comments: