Tuesday, September 27, 2011

காதல் காலம்



தை, மாசி
கன்னியவள்
தைத்திட்டாள்
என் மனதில்
கதை
   பல பேசி...



பங்குனி, சித்திரை
பந்தம் கொண்டவள்
படுத்திய பாட்டில்
பங்கம் கண்டது
     என் நித்திரை.....



வைகாசி, ஆனி
எங்கள் காதல்
ஏறியது இனிதே
பல ஏணி....



ஆடி, ஆவணி
இணைந்தே
பாடிட்டார்
இருவீட்டாரும்
  எதிர்லாவணி....



புரட்டாசி, ஐப்பசி
புதுவாழ்வில்
இறங்கிட்டோம்
புறந்தள்ளி
     பல சதி.....



கார்த்திகை, மார்கழி
காதல் களியில்
புது உறவொன்று
உருவாக
இனி
எங்கள் வாழ்வில்
தினம், தினம்
தீபாவளி.




Saturday, September 24, 2011

கண்டவர் விண்டிலர்….



அனுநித்தம் கனவில் வந்திட்ட
அழகுமுத்தம் பல தந்திட்ட
கனதினம் பிரிந்திட்ட
காதலி தொலைவில் வந்திட
கண்கள் நோக்கிட
காதல் பெருக்கிட
இதயநீர் இளகிட
இமைகள் நனைந்திட
உதடுகள் ஒட்டிட
உள்நாக்கு உலர்ந்திட
கட்டி அணைத்திட
கைகள் துடித்திட
கண்ணியம் தடுத்திட
அருகே அழைத்திட
அவள் பெயரும் மறந்திட
ஏதேதோ என்னுள் நடந்திட
உலகமொழியெலாம்
ஒரு வார்த்தை இல்லை
தன்நிலை மறந்திட்ட
என்நிலை விளக்கிட….



Tuesday, September 20, 2011

தமிழா…..தமிழா

ஓட்டு வீடு,
ஓலைக்குடிசையில்
தூசி,தும்பு
மண், மட்டி
ஒட்டி விழும்
மழைத்தண்ணீர்
வேட்டித்துணியில்
வடிக்கட்டி
தவலையில் பிடித்து
தவணையில் குடித்து
வளர்ந்தோம்
அப்போது…..


தண்டா பானி
மினரல் வாட்டர்
பிராண்ட் மாறி
குடித்தால்
த்ரோட் இன்வக்சன்
சளி, கபம்,காய்ச்சல்
ரூபாய் தொள்ளாயிரம்
செலவு
நாளொன்றிற்கு
இப்போது…..

Sunday, September 18, 2011

தாய் நீ(ர்) தாய்...


ஊற்றுச் சேய்
ஓடைக் குழந்தை
அருவிக் குமரி
ஆற்று மங்கை
  அலைகடல் பெண்....


சூரியக் கணவன்
சுடுகதிர் பட்டு
நீராவிக் கர்ப்பம்
    நீ தரித்து....


நெடுமழையாய்
பிரசவித்தாய்
நீர்சூழ்
  பிரபஞ்சத்தில்.....

Friday, September 16, 2011

கவிஞனின் கவலை...



கடந்து செல்லும்
ஒவ்வொரு முகங்களும்
எனக்கொரு  கதை
சொல்லுகின்றன.



என் கதை
எழுதவே
நேரமில்லையே....



எப்போது  எழுதுவேன்
எல்லோர்  கதைகளையும்
 நான்....






Wednesday, September 14, 2011

ராஜா மகள் பூஜா - பிறந்த நாள்

ராஜா மகள் பூஜா


இந்த ராஜாவின் குட்டி இளவரசி சிவ பூஜாவிற்கு இன்று பிறந்த நாள்.



நான்கு வயது முடிந்து ஐந்தாவது தொடங்குகிறது.


அன்புமகள் சிவபூஜா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.








Monday, September 12, 2011

வெறுமை

ஏதோ ஒரு
பயணத்தின்
இடையில்
காத்திருக்கும்போது 
கடக்க மறுப்பது
நேரம் மட்டுமல்ல
நினைவுகளும் தான்...... 

Saturday, September 10, 2011

வசியக்காரி...



பேய்க்கதைகளை
கேட்டு
பீதியடையாத
 நான்.....

உன்
வாய்க்கதைகளை
கேட்டு
வசமிழந்து போகிறேன்.




Tuesday, September 06, 2011

காதல் தந்திரம்

ஏழு கடல், ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு குகையில்
எந்திரக்கிளியிடம்
ஒளிந்திருக்குமாம்
மந்திரவாதியின் உயிர் .
படித்திருக்கிறேன்
பாலவயதில்......

பலகடல் தாண்டி
பணிக்காக பறந்தபோது
காதல் மந்திரக்கிளி
உன்னிடம் தந்திரமாக
என்னுயிர் ஒட்டிக்கொள்ள....
துடித்திருக்கிறேன்
பருவவயதில்.....