Wednesday, March 31, 2010

கொல்லம் மெயில்

கொல்லம் மெயில் . திருநெல்வேலி மாவட்ட மக்கள் அனைவருக்கும் மிக அறிமுகமான ஒன்று. ஏன்னா கேரள மாநிலம் கொல்லத்துல கிளம்பற இந்த ரயில் திருநெல்வேலி ஜங்ஷன் வந்த பின் தான் திருச்செந்தூர் போற ரயில் கிளம்பும். அச்சன்கோவில், ஆரியங்காவு, தென்மலை வழியா தமிழ்நாட்டின் செங்கோட்டைக்குள் நுழைந்து தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை டவுண் போன்ற நகரங்கள், பல கிராமங்கள் வழியாக திருநெல்வேலியை அடைந்து பின் திருச்செந்தூர் வரையும் நீட்டிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லை மக்களின் வாழ்வில் இணைந்து விட்ட இந்த ரயிலை சுற்றி அலுவலகங்கள் செல்வோர், கல்லூரிகள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உலகமே இயங்கி கொண்டிருந்தது. பலதரப்பட்ட மக்களுக்கும் பயன் அளித்து வந்த இந்த மீட்டர்கேஜ் ரயில் அகல ரயில் பாதை வேலைகளுக்காக கடந்த 2008ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள பணிகள் முடிவடைந்து இந்த வருட இறுதிக்குள் மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ரயில்பாதையில் பல தொன்மையான பாலங்களும், மலையினை குடைந்து அமைக்கப்பட்ட பல குகைப்பாதைகளும் உள்ளன.சிறிதும், பெரியதுமாக பல மலைக்குகை சுராங்கப்பாதைகளும், இயற்கை அழகு காட்சிகளும் மனதிற்கு மகிழ்ச்சியையும் வித்தியாசமான அனுபவத்தையும் தரக்கூடியவை.

நான் பலமுறை இந்த வழியாக சென்று வந்த பொழுது எடுத்த சில படாங்களும், காணொளிக்காட்சிகளும் உங்கள் பார்வைக்கு.

ஒரு சிறிய மலைக்குகையில் நுழையும் ரயில்....





ஒரு அழகிய நீர்நிலை...



வண்டி, வண்டி.. ரயிலு வண்டி... இந்த பாலத்தை பல திரைப்படங்களிலும் பார்த்து வியந்திருப்போம்.






மலைச்சரிவில் அமைக்கப்பட்டுள்ள அன்னாச்சி பழத்தோட்டம்



தடக்..தடக்..தடக்.. தடக்..தடக்..தடக்..
பாலத்தின் முழுத்தோற்றம்


தேக்குமரங்கள் அடர்ந்த மலையடிவாரம்.....


தேக்குமரங்கள், தென்னை மரங்கள் சூழ ஒரு வீடு....


பலவித மரங்கள் அடர்ந்த காடு....


தேனினும் இனிய சுவை கொண்ட பலா காய்த்து தொங்கும் தோட்டம்..


மாந்தோப்பு....

மனதை மயக்கும் மலைச்சாரல்...


தென்மலை ரயில் நிலையம்


ஓ நண்பனே..நண்பனே..நண்பனே...
கடக்கும் ரயில்கள்



இயற்கை சூழ்பாதையில் இனிய பயணம்



கூடவே வரும் ஒரு ஹேர்பின் வளைவுச்சாலை

என்ன விலை அழகே.....




மலை உச்சியில் ஒரு முகம் தெரியுதா...

அடப்பாவி மக்கா.... நிம்மதியா மேயக்கூட விடமாட்டாங்க....

நீல வானமும்,நெடிய மலை முகடுகளும்...



குற்றாலத்தில் தன்ணியில்லைன்னா வெறும்பாறை மட்டும்தான் பாட்டு படிக்கும்......



என்னடா வெறும் இருட்டா இருக்கேன்னு குறை சொல்லக்கூடாது. ஒரு பெரிய மலைக்குகையினுள் செல்லும்போது எடுத்த காணொளி. சத்தத்தோடு கேட்டால் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்.


இது இன்னொரு பெரிய மலைக்குகை...


இந்த ரயில் மறுபடியும் ஓடத்தொடங்கியவுடன் சீக்கிரம் குடும்பத்தோட ஒரு தடவை போய்ட்டு வரணும்ன்னு பிளான்.நீங்களும் வர்றதா இருந்தா சொல்லுங்க. போகும்போது தெரியப்படுத்துறேன்.

Monday, March 29, 2010

ராஜா... கல்யாண... வைபோகமே....



கடவுள் அமைத்து வைத்த மேடை.  
இணங்கும் கல்யாண மாலை.
இன்னார்க்கு இன்னார் என்று.
 எழுதி வைத்தானே தேவன் அன்று...


டண்டண் டண்டணடண்டண் டண்டண் டண்டணடண்டண் டண்டண் டண்டணடண்டண் ....

ஓக்கே ... ஸ்டாப் மியூசிக்...





ஊர்ல மோஸ்ட் வாண்டட் பேச்சிலரா இருந்ததால ஏற்பட்ட தொந்திரவுகள் தாங்காமல் டகார்ன்னு துபாய்க்கு எஸ்கேப்பியாச்சு. சென்னை, ஹைதராபாத்ல இருந்தவரை துரத்தி, துரத்தி வந்த பொண்ணு வீட்டுக்காரங்க அதற்கப்புறம் நேரடியா நம்மளை அட்டாக் பண்ணமுடியாம வீட்டுல டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா,அம்மா,அக்கா அடிக்கடி இந்த விஷயமா மாத்தி மாத்தி போன் பண்ணதாலே ஊருக்கு போனா ஏடாகூடாமா வசமா மாட்டி விட்டுடுவாங்களோங்கிற பயத்துல ஒன்றரை வருஷம் ஊர்ப்பக்கமே வரலை. வருஷத்துக்கு இரண்டு லீவுங்கிறதாலே எங்க பாஸும் ஊருக்கு போகலையா, ஊருக்கு போகலையான்னு கேட்டு கேட்டு அலுத்து போயிட்டார்.



2006ம் வருஷம் புத்தாண்டு தினத்தன்று திடீர்ன்னு ஒரு ஞானோதயம். சரி இந்த வருஷத்தோட "பேச்சு இலர்" வாழ்க்கையை முடிச்சுட்டு "குடும்ப இஸ்திரி" ஆயிடலாம்ன்னு.. அதற்கப்புறம் வீட்டுல சொல்ற விஷயங்களை கொஞ்சம் காது கொடுத்து கேக்க ஆரம்பிச்சேன். நமக்கேத்த மாதிரி நல்ல குடும்பமா பார்த்து முடிச்சிருங்கன்னு சொல்லிட்டேன். இது கேள்விப்பட்ட என்னோட பாஸ் “நீ இங்கே இருந்தா எப்படி... ஊருக்கு போய் ஆகுற வேலையை பார்”ன்னு டிக்கெட் புக் பண்ணி கைல கொடுத்திட்டார்.



இதற்கு நடுவில் ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்த அப்பா, அம்மாவிடம் குடும்ப உறவினர் ஒருவர் ஒரு பெண்ணை காண்பித்து "பிடிச்சிருந்தா சொல்லுங்க. உங்க பையனுக்கு பேசி முடித்துவிடலாம்" என்று கூறியுள்ளார். அக்கா, மாமாவும் அந்த கல்யாணத்துக்கு போயிருந்ததால் அவர்களும் பார்க்க எல்லோருக்கும் பிடித்து போய்விட மறுநாளே எனக்கு தகவல் வந்தது. சினேகா அப்போ பேமஸ் என்பதால் பெண் சிநேகா போல் இருப்பார் என பயங்கர பில்டப். நம்மளும் கவிதைல்லாம் எழுதிட்டோம்.



ஜாதகப் பொருத்தம் பார்க்கப் போனபோது மனப்பொருத்தம் இருந்தால் பண்ணிக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.அவர்கள் வீட்டில் எங்கள் குடும்பத்தை ஏற்கனவே அறிவார்கள். என்னை பற்றி கூறியவர்கள் எல்லாம் விஷால் மாதிரி இருப்பார், ஸ்ரீகாந்த் மாதிரி இருப்பார்ன்னு ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருக்கிறார்கள். மணப்பெண்ணோடு கல்லூரியில் படித்த எங்களூர் பெண் ஒருவர் வேற எங்க ஊர்லயே அம்சமான ஆளு நான்தான்னு சொல்லியிருக்கு. எங்கண்ணன் கல்யாணத்துக்கு ஊரழைக்க போயிருந்தபோது அந்த பொண்ணு நம்மளை சைட்டு அடிச்சிருக்குது.


இதெல்லாம் தெரியாம 2006 ஜூன் 10ம் தேதி யதார்த்தமா போன என்னை அக்காவும், மாமாவும் பாத்திரத்துல மாட்டுன பதார்த்தமா ஏர்போர்ட்டுல இருந்து வீடு போறவரைக்கும் பொண்ணு புராணம் சொல்லி வறுத்தெடுத்திட்டாங்க. ஏர்போர்ட்டுல வீடு போய்ச் சேர ராத்திரி 11 மணி ஆயிட்டுது. அதற்கப்புறம் அப்பா,அம்மா கண்டினியூவா ட்யூன் பண்ண ஆரம்பிக்க (ஆர்வம்) தாங்கமுடியாம பொண்ணு பார்க்க நாளைக்கே போயிடுவோம்ன்னு சொல்லிட்டேன்.



மறுநாள் காலையில் அவங்க வீட்டுக்குக்கு பக்கத்துல நடந்த என் பிரெண்டோட அக்கா கல்யாணத்துக்கு போயிட்டு அவங்க வீட்டுக்கு போன் பண்ணி பொண்ணு பார்க்க விஷயத்தை சொன்னோம். மதியம் ஒரு மணிக்கு மேலதான் நல்லநேரம். அப்ப வாங்கன்னு அவங்க சொல்லவும் கல்யாண வீட்டுலே கொஞ்சநேரம் இருந்துட்டு மதியசாப்பாடும் சாப்பிட்டுட்டு அவங்க வீட்டுக்கு போனா ஒரு பெருங்கூட்டமே திரண்டு இருந்ததை பார்த்த நான் அப்படியே ஷாக்காயிட்டேன். "பேசுறாங்க,பேசுறாங்க... பேசிகிட்டே இருக்காங்க.. " பொண்ணை கண்ணுல காமிக்கிற மாதிரியில்லை. பொறுத்து, பொறுத்து பார்த்து பொறுமையிழந்த நான் டகார்ன்னு எந்திச்சு பொண்ணு இருந்த ரூம்ல பூந்துட்டேன்.



எல்லோரும் அதிர்ச்சியடைந்தாலும் "சரி,சரி,மாப்பிள்ளை தனியா பேச ஆசைப்படறார் போல" ன்னு சொல்லிகிட்டு ஒரு பத்துபேரு அந்த ரூமுக்குள்ளே வந்துட்டாங்க. பொண்ணுகிட்ட நான் என்ன கேட்டாலும் பொண்ணுக்கு முன்னாடி அந்த பத்து பேரும் பதில் சொல்றதைப் பார்த்து கடுப்பான எங்க அக்கா, " வாங்க நாம எல்லாரும் வெளியே இருப்போம். அவங்க ரெண்டு பேரும் தனியா பேசட்டும்"ன்னு சொல்லி எல்லாரையும் வெளியே தள்ளிகிட்டு போனாங்க. "அப்பாடி"ன்னு பொண்ணு பக்கம் திரும்பி "என்ன படிச்சிருக்கீங்க"ன்னு கேள்வி கேட்டா, இப்போ கிச்சன்லயிருந்து பதில் வருது. "என்னடா பொண்ணு இங்கேயிருக்கு. சவுண்டு எங்கேயோ இருந்து வருதே,டப்பிங் வாய்ஸ் யார் கொடுக்கிறா"ன்னு பார்த்தா பொண்ணோட அம்மாவுக்கு காது ரொம்ப கூர்மையாம். அவங்கதான் சமையல்கட்டுல இருந்து டப்பிங் கொடுத்தது.



அந்த நேரம் பார்த்து எனது அலைபேசியில் நண்பர் ஒருவர் அழைக்க வீட்டினுள் சிக்னல் சரியாக இல்லாததால் வீட்டின் வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தேன். பேசி முடித்து நிமிர்ந்து பார்த்தால் அந்த தெருவே திரண்டு என்னை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. "சரியா போச்சு. நாம பொண்ணு பார்க்க வந்தா ஊரே வச்ச கண்ணு வாங்காம நம்மளை பார்த்துகிட்டு இருக்கே" என்று நினைத்தவாறு பொண்ணைத் தவிர அனைவரிடமும் பேசிவிட்டு விடைபெற்று கொண்டு வீட்டிற்கு திரும்பினோம்.



அதற்கடுத்த வாரம் இந்தோனேஷியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனது அண்ணனும் குடும்பத்துடன் வர அவரிடமும் கலந்து பேசி பெண் பிடித்திருப்பதாக பெண் வீட்டாருக்கு தகவல் சொல்லிவிட்டோம். எனது அண்ணன் ஒரு மாத விடுமுறையிலே வந்திருந்ததால் அவர் செல்வதற்குள் எனது திருமணத்தை முடித்து விடலாம் என எங்கள் வீட்டில் முடிவு எடுக்கப்பட்டது. பெண் வீட்டிலும் தயாராக இருந்ததால் சரி என்று சொல்லிவிட்டனர். அதற்கடுத்த வாரம் வெற்றிலை கை மாறி கல்யாணநாளும் உறுதி செய்யப்பட்டது.



திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் இருவரும் பேசிக்கொள்ள எனது அண்ணன் மணப்பெண்ணிற்கு ஒரு மொபைல் போன் பரிசளித்தார். மணப்பெண் அப்போது முதுகலை இறுதியாண்டு படித்து கொண்டு இருந்தார். அப்போது தேர்வு நேரம். படிப்பிற்கு தொந்தரவு இருக்கக்கூடாது என்பதற்காக தேர்வு முடிந்ததும் பேசிக்கொள்ள முடிவு செய்தோம். தினமும் தேர்வு எழுதி முடித்து வெளியே வந்ததும் போன் செய்து ஓரிரு நிமிடம் பேசுவார்.


இறுதித்தேர்வு நாள் அன்று நண்பனின் திருமணம். தாலி கட்டி முடிந்ததும் சாப்பிடக்கூட செய்யாமல் மண்டபத்திலிருந்து அவசர அவசரமாக கிளம்பிய என்னை வழிமறித்த மணமகனின் தங்கைகள் “அண்ணியை பார்க்கத்தானே இவ்வளவு அவசரமாக செல்கிறீர்கள்” என்று கிண்டல் செய்யவும் எப்படி இந்த பெண்கள் அறிந்தார்கள் என எனக்கு மிக ஆச்சரியம்.


அவர் படித்த சதக் அப்பா கல்லூரி நெல்லை நகருக்கு வெளியே தனியாக இருந்ததால் அக்கல்லூரியில் படித்த பதிவுலக நண்பர் நிலவு நண்பனோடு பைக்கில் சென்று இறங்கினேன். வழக்கம் போல தேர்வு எழுதி முடித்ததும் வெளியே வந்ததும் அவர் எனக்கு போன் செய்ய நானும் பேசிக்கொண்டே எதிரே சென்று நின்றேன்.அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த அவர் தோழியருக்கு பின் ஒளிந்தார். அவரது தோழியர் ட்ரீட் கேட்க அனைவரையும் நெல்லையில் சிறந்த அரசன் ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்து சென்று அவர்கள் விருப்பபட்டதை வாங்கி கொடுத்தேன்.



அன்று தேர்வு இறுதி தினம் என்பதால் அவர்கள் எல்லோரும் செட் சுரிதார் எடுக்க டவுண் செல்ல ஏற்கனவே திட்டம் போட்டிருக்கின்றனர். என்னையும் அழைக்க நானும் உடன் சென்றேன். ஆரெம்கேவி சுடி டாட் காமில் நுழைந்து கலகலக்க வைத்தவர்கள் “சரி, எங்களுக்கு ட்ரீட் கொடுத்தீங்க, கல்யாணப் பொண்ணுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கப்போறீங்க” என்று உசுப்பேத்த இவரோ கூலாக இருப்பதிலேயே காஸ்ட்லியான சுடிதார் ஒன்றை எடுத்து என் பர்சை பழுக்க வைத்தார்.



அதன்பின் எந்த நேரமும் எஸ்.எம்.எஸ் தான். விடிய விடிய பேச்சுதான். கடிகளாலும், கவிதைகளாலும் நிறைந்தது மொபைல் இன்பாக்ஸ்.


கல்யாணத்திற்கு ஜவுளி எடுக்க இருவீட்டாரும் போயிருந்தபோது எல்லோரும் ஆரெம்கேவியில் பட்டுபுடவை எடுப்பதில் பிசியாயிருக்க நாங்கள் இருவரும் தனியாக போத்திஸில் புகுந்து ரிசப்சன் ட்ரெஸ் எடுத்து வந்தோம். முகூர்த்தப்பட்டாக என்னை மிகவும் கவர்ந்த ஒரு மிட்டாய் ரோஸ் கலர் பட்டுப்புடவையை நான் எடுக்கச்சொல்ல மணப்பெண் உள்பட அனைவரும் மறுத்தனர். எங்கள் திருமணத்திற்கு இரண்டு மாதத்திற்கு பின் நடந்த சூர்யா-ஜோதிகா திருமணத்தில் அதே நிறத்தில், டிசைனில் ஜோதிகா முகூர்த்தப்பட்டு கட்டியிருந்ததை பார்த்து என் மனைவி உள்பட அனைவரும் வியந்தனர்.


ஒருவழியாக எல்லோருக்கும் ஜவுளி எடுத்து முடித்து நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள நெல்லை சரவணபவாவில் சாப்பிட்டு விட்டு கிளம்ப இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. மறுநாள் அக்கா பசங்களுக்கு பள்ளி இருந்ததால் நாங்கள் வந்த காரில் அக்காவை களக்காடு அனுப்பிவிட்டு மணப்பெண் வீட்டில் வந்த காரில் எங்கள் வீட்டில் விட்டுவிட்டு செல்வதாக கூறியதால் நாங்கள் அனைவரும் ஒரே காரில் கலகலப்பாய் கதை பேசிக்கொண்டே அம்பை திரும்பினோம்.



பவர்கட்டால் இருளடைந்திருந்த எங்கள் ஊருக்குள் கார் நுழைந்து நாங்கள் இறங்கிகொண்டு மணமகள் வீட்டாரையும் வீட்டினுள் அழைக்க மணப்பெண் எங்கள் வீட்டில் கால் எடுத்து வைக்கும்பொழுது தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்து வீடும், ஊரும் ஒளிவெள்ளத்தில் மிதந்தது. மிகவும் சந்தோஷமடைந்த என் பெற்றோர் என்னை துபாயில் இருந்து வரும்போது வாங்கி வந்திருந்த மோதிரத்தை அவருக்கு அணிவிக்க சொன்னனர். இரண்டு இதயங்கள் இணைந்திருப்பது போன்ற அந்த மோதிரத்தை என் மனைவி அதன்பின் கழட்டியதேயில்லை.



க.பி.க தலைவர் அன்பு நண்பர் பாலபாரதி மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்களால் கல்யாணப்பத்திரிக்கை இணையத்தில் ஏற்றப்பட்டதும் உலகமெங்கும் இருந்து நண்பர்கள் அலைபேசியிலும், மின்மடல் மூலமாகவும் வாழ்த்து மழை பொழிந்திட திருமணநாளன்று உற்றார், உறவினரெல்லாம் ஒன்றுகூடி வாழ்த்திட 12.07.2006 அன்று எங்கள் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.


எனது வாழ்க்கையின் இன்றியமையாத முக்கிய நிகழ்வை 150வது பதிவாக எழுதியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


Saturday, March 27, 2010

அவள் பெயர் ரெஞ்சு... மாநிறம்... வயது 23...


நித்தியானந்தா - ரஞ்சிதா பத்தி எதுவும் மேட்டர் இல்லீங்க.... இந்த தடவை ஊருக்கு போகும் போது நடந்த சம்பவம்...

கெய்ரோவில் பிளைட் கிளம்பவே கொஞ்சம் லேட்டானதால் துபாய் ஏர்போர்ட் போய் சேரவும் நேரமாகி விட்டது. துபாயிலிருந்து திருவனந்தபுரம் செல்ல இருக்கும் கனெக்டிங் பிளைட் கிளம்ப ஒரு மணி நேரம் மட்டுமே இருந்ததால் அவசர அவசரமாக ட்யூட்டி ஃபிரீ ஷாப்களை நோக்கி ஓடினேன். இங்கு எகிப்தில் 18 கேரட் நகைகள் மட்டுமே இருந்ததால் தரமான 22 கேரட் தங்க நகைகள் வாங்க வேண்டும் என்பதற்காகவே துபாய் வழியாக பயணம் மேற்கொண்டேன். கண்ணில் பட்ட நகைக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. விசாரித்ததில் வேறு கடைகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.

அவ்வளவு பெரிய ஏர்போர்ட்டில் ஒரே ஒரு நகைக்கடை மட்டுமே இருந்ததால் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. விற்பனை பிரதிநிதிகளும் அதிகமாக இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்த நான் கஸ்டமர் கேட்ட ஏதோ மாடல் நகை எடுப்பதற்காக கொஞ்சம் தள்ளி வந்த ஒரு விற்பனை பிரதிதி பெண்ணிடம் “எக்ஸிக்யூஸ் மீ, ஐ வாண்ட் டூ பை அரவுண்ட் 6,000 யூ.எஸ் டாலர்ஸ்” என்று கூறவும் “ஒன் மினிட்” என்றவள் அந்த கஸ்டமரிடம் சென்று அவர் கேட்ட மாடல் இல்லை என்று கூறி விட்டு என்னிடம் வந்து யூ வாண்ட் டூ பை பிஸ்கட் ஆர் ஆர்ணமண்ட்ஸ்” என்று வினவினாள்.

“போத்.ஃபர்ஸ்ட் ஷோ மீ சம் பேங்கிள்ஸ் அண்ட் செயின்ஸ்” என்று கூறி அவள் காண்பித்த மாடல்களில் பிடித்தவற்றை வாங்கி கையிலிருந்த பையினுள் வைத்துவிட்டு அடுத்ததாக சாக்லேட்டுகள் வாங்க சென்றேன்.

நண்பர்கள், உறவினர்கள் என நிறைய பேருக்கு கொடுக்க வேண்டியிருந்த்தால் விதவிதமான சாக்லேட்களை நிறைய வாங்கினேன். அவற்றை எல்லாம் கையிலிருந்த பையினுள் வைத்துவிட்டு தங்க நகைகள் மற்றும் பிஸ்கட்டை மட்டும் சட்டை பாக்கெட்டில் எடுத்து வைத்து கொண்டேன். அதற்குள் செக் இன் நேரமாகிவிட்டதால் ஃபார்மாலிட்டிகள் முடித்து விமானத்தில் ஏறி இருக்கை தேடி அமர்ந்தேன்.

நீண்ட பயணம் அலுப்பாக இருந்ததால் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தபோது “எக்ஸ்க்யூஸ் மீ” என்றொரு குயில் குரல் கேட்டது. ஏர்ஹோஸ்டஸ் ஆக இருக்கலாம் என்று சலிப்புடன் கண்களை திறந்த என் அருகில் ஒரு அழகிய இளம்பெண் நின்று கொண்டிருந்தார். ’30-E’ என்றவாறு பயணச்சீட்டை காண்பித்தபின்தான் அவர் என்னருகே அமரக்கூடியவர் என புரிந்தது.

நான் இருந்த 30ம் வரிசையில் A,B - இடது ஓரம், C,D,E,F- நடுவில், G,H- வலது ஓரம். நான் F . ஓரத்து இருக்கையில் அமர்ந்திருந்ததால் என்னைத்தாண்டி தான் அவர் இருக்கையில் சென்று அமரமுடியும். அந்த பக்கமும் ஆண்களே அமர்ந்திருந்ததால், “இஃப் யூ வாண்ட்,யு கேன் சிட் திஸ் கார்னர் சீட். ஐ வில் சிட் இன் யுவர் சீட்” என்று நான் கேட்க “இஃப் யூ ஹேவ் நோ பிராப்ளம். ப்ளீஸ்” என்று அவர் கூறவும் நான் எழுந்து அவர் இருக்கையில் அமர அவர் “தேங்யூ” என்றவாறு என் இருக்கையில் அமர்ந்தார்.

சராசரி உயரம். மாநிறம். 25 வயதிற்குள்தான் இருக்கும். ஜீன்ஸ் பேண்ட். முழுக்கை சட்டை. குட்டையான கூந்தலை பின்னாமல் விரித்து விட்டிருந்தார். அவர் அணிந்திருந்த பவர் கண்ணாடி குறையாக தெரியாமல் அழகாகவே இருந்தது என்றாலும் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது. ”ஐ ஆம் ரெஞ்சு” என்று அறிமுகப்படுத்தி கொண்டவரிடம் ”ஐ ஆம் ராஜா” என்றேன். திருவனந்தபுரத்தில் வீடு என்று கூறவும் அவரோடு எனக்கு தெரிந்த மலையாளத்தில் சம்சாரிக்க தொடங்கினேன்.

அறிவிப்பிற்கு பின் விமானம் கிளம்ப நான் அவரிடம் “துபாயில எவுடையானு” என வினவவும் “இல்லை ஷார்ஜா. ஒரு ஹாஸ்பிட்டலில் லேப் டெக்னீசியனா பணி.சார் துபாயோ”. ”இல்லை.முன்னே துபாய்ல இருந்தது. இப்போ பணி எகிப்தில்”.மேலும் சகஜமாக பேசி கொண்டு வந்ததிதிலிருந்து தோழிகளோடு ஷார்ஜாவில் அறை எடுத்து தங்கியிருப்பதாகவும் இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு செல்வதாகவும் அறிந்தேன்.

அந்த நேரத்தில் உணவு வர அவர் வேண்டாம் என மறுக்கவும் ஏன் என்று கேட்டதில் “இரண்டு நாள்களாக காய்ச்சல்” எனவும் “ஏற்கனவே மருந்து உட்கொண்டுள்ளதால் உணவு தேவையில்லை” என்று கூறவும் “சரி.நீங்கள் ஓய்வெடுங்கள்” என்று கூறி விட்டு சாப்பிட்ட பின் நானும் கண்ணயர்ந்தேன்.

விமானம் இறங்கப் போகும் அறிவிப்பு வரவும் கண்விழித்து தயாரானோம். தலை பயங்கரமாக வலிப்பதாகவும், வாந்தி வருவது போல் உள்ளதாகவும் அவர் கூற விமானம் இறங்கும் நேரம் என்பதால் பாத்ரூமுக்கு எழுந்து செல்ல முடியாது எனவே இருக்கையில் இருந்த வாமிட் பேக்கை எடுத்து கொடுத்தேன்.

அதற்குள் விமானமும் இறங்கி விட அவர் மிகவும் களைப்பாக இருந்ததால் அவர் மறுக்க மறுக்க அவர் பைகளையும் நானே எடுத்து கொண்டேன். கீழே இறங்கி செக் அவுட் முடித்து ஒரு தள்ளு வண்டியை எடுத்து வந்து எனது கைப்பையையும், அவரது கைப்பைகளையும் வைத்து தள்ளிக் கொண்டே பிரயாணப் பெட்டிகள் எடுக்கும் இடத்திற்கு வந்தோம்.

பிரயாணப் பெட்டிகளும் ஏற்கனவே வந்திருந்ததால் ஏற்கனவே இருந்த தள்ளு வண்டியில் அவரது பெட்டிகளையும், இன்னொரு தள்ளு வண்டியில் எனது பெட்டிகளையும் வைத்து தள்ளிகொண்டு வெளியே வந்தோம். அவரது அண்ணன் அவரை அழைத்து செல்ல வந்திருந்த்தால் நன்றி கூறி விடைபெற்று சென்றார். அதற்கு முன்பே எனது மனைவியும், அப்பாவும் கண்ணில் பட்டுவிட்டதால் நான் அவர்களை நோக்கி வேகமாக சென்றேன்.

காருக்கு சென்று தள்ளு வண்டியில் இருந்து பெட்டிகளை எடுத்து வைக்கும் போது கைப்பை இல்லாததை கண்டு அதிர்ந்த நான் ரெஞ்சுவின் தள்ளுவண்டியில் இருந்து எனது பையை எடுக்க மறந்ததை உணர்ந்தேன். நல்லவேளை பாஸ்போர்ட், ரிட்டர்ன் டிக்கெட், வாங்கிய தங்கம் எல்லாம் சட்டைப் பையிலே இருந்தது. துபாய் ஏர்போர்ட்டில் வாங்கிய சாக்லேட்டுகள் மட்டுமே கைப்பையில் இருந்தன. எனது முகமாற்றதை கண்டு "என்ன ,என்ன" என்று கேட்ட மனைவியையும், அப்பாவையும் கலவரப்படுத்த விரும்பாமல் “நீங்கள் காரிலே இருங்கள்.நான் பாத்ரூம் சென்று வருகிறேன்” என்று கூறி ஏர்போர்ட் பார்க்கிங் முழுதும் தேடியும் ரெஞ்சுவும், அவள் அண்ணனும் கண்களில் படவில்லை.

ரெஞ்சுவின் அலைபேசி எண்ணோ, மின் மடல் முகவரியோ வாங்கி வைக்க மறந்ததை நொந்தவாறு வேறுவழியில்லாமல் ஏதோ நம்பிக்கையில் சரி பார்த்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து கிளம்பினேன். திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர மாலை 4 மணி ஆகிவிட்டது.

வீட்டிற்கு வந்தபின் தான் கவனித்த மாதிரி கைப்பையை உடன் பயணித்த நண்பர் தவறுதலாக எடுத்து சென்று விட்டதாகவும் பின்னர் வீட்டுக்கு எடுத்து வருவார் என்றும் கூறி சமாளித்தாலும் என் மனதில் ஏதேதோ குழப்பம். " ஒரு வேளை நான் ஏர்போர்ட்டில் தங்கம் வாங்கி கைப்பையில் வைத்ததை பார்த்து திட்டமிட்டே எடுத்து சென்று இருப்பாரோ ' என்று கூட தோன்றியது. " சரி எப்படியோ... தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது " என்று ஆறுதல் கொண்டேன்.

உடல் அலுப்பு, நேர மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலை மாற்ற குழப்பங்களால் இரண்டு நாள்களுக்கு பின்தான் இணையதளம் சென்றேன். “சாரி” என்று தலைப்பிட்டு வந்திருந்த மெயில் எனக்கு ஆனந்தத்தையும்,அதிர்ச்சியையும் ஒருங்கே தந்தது. ஆம். அது ரெஞ்சு அனுப்பியிருந்த மெயில். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் மயக்கம் வருவது போல் இருந்ததால் காரில் ஏறி படுத்துவிட்டதாகவும் தள்ளுவண்டியை தள்ளி வந்த அவர் அண்ணனே பைகளையும், பெட்டிகளையும் காரில் எடுத்து வைத்தும் வீட்டுக்கு வந்து இறக்கியும் வைத்தாராம். இவர் வீட்டுக்கு சென்றதும் உறங்கிவிட்டாராம். இரவுதான் எழுந்தாராம். மறுநாள் தோழியர் கொடுத்து விட்ட பொருள்களை வாங்க அவர்கள் உறவினர்கள் வாங்க வந்தபோது தான் எனது கைப்பையை கவனித்துள்ளார். நல்லவேளையாக அதில் கட்டப்பட்டிருந்த சீட்டில் நான் எனது மின்மடல் முகவரியை எழுதியிருந்ததால் உடனே மெயில் அனுப்பியிருக்கிறார். அவரது அலைபேசி எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.

உடன் அலைபேசியில் அழைத்து பேசினேன். தவறுக்கு மன்னிப்பு கேட்டவரிடம், ' மறந்து வந்தது நான்தான். எனவே வருத்தப்பட வேண்டாம் ' என்று கூறி நடுவில் திருவனந்தபுரம் வரும் வாய்ப்பு இல்லை. எனவே பத்து நாட்களுக்கு பின் விடுமுறை முடிந்து திரும்பும் வழியில் வந்து வாங்கி கொள்வதாக தெரிவித்தேன்.அதன்படியே கிளம்பும் முன்தினம் ரெஞ்சுவிற்கு போன் செய்து அவர்கள் அண்ணனிடம் ஏர்போர்ட்டுக்கு கொடுத்து விடும்படி கூறினேன். ஆனால் அவரோ நான் செய்த உதவியை கேள்விப்பட்ட அவர்கள் வீட்டில் அனைவரும் என்னைப் பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாகவும் எனவே கண்டிப்பாக வீட்டிற்கு வந்து காலை உணவு சாப்பிட்டு விட்டுதான் செல்லவேண்டும் என்றும் அன்பு கட்டளையிட்டார்.

மறுநாள் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது ரெஞ்சுவுடன் அவர், தாய், தந்தை, சகோதரர்கள் அனைவரும் மிகவும் நன்றி கூறி மிகவும் சிறந்த காலை உணவையும் அளித்தார்கள். அவர்களிடம் விடைபெற்று ரெஞ்சு தந்த பையை வாங்கி வீட்டில் சேர்த்துவிடுமாறு டிரைவரிடம் கொடுத்துவிட்டு ஏர்போர்ட் சென்று நடைமுறைகள் முடித்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.

அதிகாலையிலே வீட்டில் கிளம்பிய அலுப்பில் கண்மூடி புதியதொரு குடும்பத்தின் உறவு கிடைத்தது குறித்து எனது மனம் மகிழ்ந்து கொண்டிருந்தபோது என் அருகில் வந்தமர்ந்த வாட்டசாட்டமான ஐரோப்பிய இளம்பெண் "எக்ஸ்க்யூஸ் மீ,ஹவ் டூ அட்ஜஸ்ட் தி சீட்" என்று கேட்டதால் கண்விழித்தேன். இருக்கையின் செயல்பாட்டை விளக்கிய கூறிய என்னிடம் கேரளாவிற்கு சுற்றுலா வந்ததாக கூறி அவர் பேச ஆரம்பித்தவுடன் இவரிடம் இணைய தொடர்பு முகவரியை வாங்கி கொள்ளவேண்டும் என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது.

Wednesday, March 24, 2010

நானறியேன் பராபரமே....


வீடாயிரம் நாள்...
பள்ளிக்கூடாயிரம் நாள்....
நான் போகும்
நாடாயிரம் நாள்....

எனதிந்த பாடு
இன்னும்
என்னாயிரம் நாள்....


நானறியேன் பராபரமே....